கார்கில் வெற்றியை நினைவு கூரும் இந்திய ராணுவம்: நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பயணம்!
கார்கில் வெற்றியின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதுமான இந்திய ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பயணம் தொடங்கியுள்ளது
1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொண்டதன் 25ஆவது ஆண்டினை நினைவுகூரும் வகையிலும், கார்கில் வீரர்களின் துணிவு மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையிலும், இந்தியா முழுவதற்குமான மோட்டார் சைக்கிள் பயணம் இன்று தொடங்கியது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தில் மூன்று அணியினர் ஒவ்வொரு அணியிலும் 8 மோட்டார் சைக்கிள்களுடன் கிழக்கே தின்ஜான், மேற்கே துவாரகா, தெற்கே தனுஷ்கோடி என நாட்டின் மூன்று முனைகளிலிருந்து புறப்பட்டனர். இவர்கள் பயணம் செய்யும் வழியில் வசிக்கின்ற கார்கில் வீரர்கள், வீர நங்கைகள், மூத்த ராணுவ வீரர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளனர். இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வதை ஊக்கப்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செல்லும் வழியில் உள்ள போர் நினைவுச் சின்னங்களிலும் இவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தின்ஜானிலிருந்து புறப்பட்ட அணியினர் குவஹாத்தி, கோரக்பூர், லக்னோ, ஆக்ரா வழியாக சுமார் 2489 கிலோ மீட்டர் பயணம் செய்து டெல்லியை அடைவார்கள். துவாரகாவில் இருந்து புறப்பட்ட அணியினர் அகமதாபாத், உதய்பூர், ஜெய்பூர், ஆல்வார் வழியாக சுமார் 1565 கிலோ மீட்டர் பயணம் செய்து டெல்லியை அடைவார்கள். தனுஷ்கோடியில் இருந்து புறப்பட்ட அணியினர் மதுரை, கோயம்புத்தூர். பெங்களூரு, ஹைதராபாத், போபால், குவாலியர் வழியாக சுமார் 2963 கிலோ மீட்டர் பயணம் செய்து டெல்லியை அடைவார்கள்.
ஜூன் 24ஆம் தேதி 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்!
ஜூன் 26ஆம் தேதியன்று இந்த அணியினர் டெல்லிக்கு சென்ற பின் இரண்டு அணிகளாகி ஒரு அணியினர் அம்பாலா, அமிர்தசரஸ், ஜம்மு, உதம்பூர், ஸ்ரீநகர் வழியாக சுமார் 1085 கிலோ மீட்டர் பயணம் செய்து கார்கில் போரின் முக்கியப் பகுதியான திராசில் உள்ள கூன்குன்றுக்கு செல்வார்கள். மற்றொரு அணியினர் மணாலி, டாங்ஸ்டே, லே வழியாக சுமார் 1509 கிலோ மீட்டர் பயணம் செய்து திராஸ் பகுதியை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் கடந்த 1999ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள் கார்கில் பகுதியை முற்றுகையிட்டன. கார்கில் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள கக்சார், ஹர்ட்ராஸ், திராஸ், படாலிக் போன்ற பகுதிகளையும் பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பாகிஸ்தான் பிடியிலிருந்து கார்கிலை மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கார்கில் போர் நடத்தப்பட்டது. இந்த போருக்கு ஆப்பரேஷன் விஜய் என பெயரிடப்பட்டது.
உயரமான மலைப் பகுதியில் சுமார் 60 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்து, கார்கிலை மீட்டது இந்திய ராணுவம். கார்கில் போர் முடிவுக்கு வந்த தினத்தை கார்கில் விஜய் திவாஸ் என அறிவித்து அப்போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஆப்பரேஷன் விஜய்யில் பங்கேற்ற வீரர்களின் பங்களிப்புகளுக்கு தகுந்த கவுரமாக டிராசில் உள்ள 5140 முனைக்கு கார்கில் துப்பாக்கி மலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.