வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு ஒடிசா நோக்கி செல்ல வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக மாறக்கூடும். மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரி, நெல்லை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக நாளை மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில், அதாவது கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் சின்னம் ஓமன் வளைகுடாவை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் வாய்ப்பு தற்போது இல்லை என்றார்.

 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அக்டோபர் 7-ம் முதல் 12-ம் தேதி வரை மத்திய அரபிக்கடலுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் 7 முதல் ம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சங்கரன்கோவில், அம்பாசமுத்திரத்தில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.