Governer R N Ravi: தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்; பீதி அடைய வேண்டாம்... ஆளுநர் ரவி வேண்டுகோள்
தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதி அடைந்து, பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர். என். ரவி வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுகின்றனர் என்றும் அதற்கு பயந்துதான் இங்கு பணியாற்றி வந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கிறார்கள் என்றும் வதந்தி பரவியது. வட மாநிலத்தவரை தமிழர்கள் தாக்குவது போல போலியான வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டன.
செவ்வாய்க்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட விஷமிகள், தமிழர்கள் வடமாநிலத்தவரைத் தாக்குவதால்தான் அவர்கள் அஞ்சி வெளியேறுகிறார்கள் என்று புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.
வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்..! தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு
இதனைத் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், வெறுப்பைத் தூண்டும் வகையில் வதந்தியைப் பரப்புபவர்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலியான தகவல்களை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி பகிர்ந்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்த காவல்துறை போலி வீடியோவைப் பகிர்ந்த நால்வரை கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர். என். ரவி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள், நட்பானவர்கள் என்று கூறியுள்ள ஆளுநர் ரவி, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது என்றும் ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.