தமிழகத்தில் நெல்லை பாளையம்கோட்டையில் உள்ள சிறையில் கைதிகள் சாதி வாரியாகப் பிரிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பெரும் கொடுமை அரங்கேறி வருகிறது. சிறைக்கு உள்ளேயும் அதிகாரிகள் மிகமோசமான சாதிய வேறுபாட்டை கடைபிடித்து வருகின்றனர் என்ற தண்டனை முடிந்து வெளியே வரும் கைதிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கைதிகளை சாதிப் பெயரைக் கூறி அழைத்தல், சாதிவாரியாகப் பிரித்து அடைத்து வைத்தல், ஒவ்வொரு சாதிக்கும் ஏற்ற வசதிகள் செய்து கொடுத்தல் போன்ற மோசமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக தண்டனை முடிந்து வந்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பிரபல ஆங்கிலநாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் நெல்லை பாளையம்கோட்டை சிறையில் கைதிகள் சாதிவாரியாக பிரித்து அடைக்கப்பட்டுள்ளனர். தேவர், நாடார், தலித், உடையார் என பல்வேறு சாதிகளைச் சேர்ந்த கைதிகள் பிரிக்கப்பட்டு தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், கைதிகள் மற்றவர்களுடன் இணைவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை, மேலும், கைதிகளை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களில் அழைக்காமல், பெயரைச் சொல்லி அழைக்காமல், சாதியின் பெயரைச் சொல்லி அழைத்து சிறை அதிகாரிகள் அவமானப்படுத்தும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

40வயதாகும் முனியப்பன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பாளையங்கோட்டை சிறையில் 7 ஆண்டுகள் 6 மாதம் சிறையில் இருந்தவர். தன்னுடைய தண்டனை காலத்தில் பலமுறை உயர் அதிகாரிகளிடம் சிறை அதிகாரிகள் சாதிப் பெயரைக் கூறி அழைப்பதை நிறுத்த வேண்டும் எனக் கோரி பலமுறை மனு அளித்துள்ளார். மேலும், சிறைக் கைதிகள் பல்வேறு சாதிகளாக சேர்ந்துவிடக்கூடாது, கலந்துவிடக்கூடாது என்ற முன்எச்சரிக்கையோடு நடந்து கொள்கின்றனர் என்று சிறைக்கு சென்று வந்தவர்கள் தெரிவிக்கன்றனர்.

138 ஆண்டு பழைமையான பாளையம்கோட்டை சிறையில் 4 அறைகள் தேவர் சமூகத்துக்கும், 2 அறைகள் தலித் சமூகத்தினருக்கும், ஒருஅறை நாடார் சமூகத்துக்கும், பிற சமூகத்தினருக்கு ஒரு அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவர் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் உயர் பதவிகளில் இருப்தால், அவர்களுக்கு மட்டும் அதிகமான வசதிகள் செய்த கொடுக்கப்பட்டுவருவாதவும் கூறப்படுகிறது.

 

ஆனால், சிறைகளில் இதுபோன்று எந்தவிதமான சாதியப் பாகுபாடும் இல்லை என்று தமிழக அரசு மறுக்கிறது. சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், இதுபோன்ற எந்த பழக்கமும் தமிழக சிறைகளில் இல்லை. அப்படி இருக்கிறதா என்றும் விசாரிக்கிறேன் எனத் தெரிவித்தார். பாளையம்கோட்டை சிறையின் கண்காணிப்பாளர் சி. கிருஷ்ணகுமார் கூறுகையில், சிறைகளில் எந்தவிதமான சாதியபாகுபாடும் இல்லை. கைதிகள் சாதிப்பாகுபாடு பார்க்காமல், கலந்து அனைத்து சிறைகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இது குறித்து சிறைத்துறை டிஜிபி அசுடோஷ் சுக்லா ஆங்கிலநாளேட்டுக்கு அளித்தபேட்டியில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துகிறேன். அது உண்மையாக இருந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் அதேசமயம், சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சிறையில் கைதிகளை சாதிவாரியாக பிரித்து சிறைகளில் அடைக்கும் நடைமுறை கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

நெல்லை அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், பகுதிகளில் அடிக்கடி சாதிக்கலவரம் நடக்கும்பகுதி என்பதால், பதற்றமான பகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சாதிப்பழிவாங்கல் கொலைகள் நடப்பதையும் ஊடகங்கள் செய்தியாக வெளியிடுகின்றன. வெளியில் தங்கள் வன்மங்களை தீர்க்க முடியாத சிலர் சிறைக்குள் வந்து தீர்த்துக்கொள்கின்றனர். அதைத் தவிர்க்கும் பொருட்டு சாதி வாரியாக கைதிகள் பிரித்து அடைக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றனர். 

அதேசமயம், சிறைக்குள்  தலித், தேவர்கள் என அதிகாரிகளே பிரித்து அடைத்துவைப்பது அவர்களுக்கு இடையிலான பாகுபாட்டை மேலும் அதிகப்படுத்துமே அன்றி குறைக்காது என்று சிறைக் கைதிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக உளவியல் ரீதியாக ஆலோசனை தெரிவித்துவரும் மருத்துவர் கே.ராஜா தெரிவித்துள்ளார்.