தமிழக கடலோர பகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. கஜா புயலுக்கு பிறகு தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி சென்றது. அதன் பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், புதுவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட உள்மாவட்டங்களில் பரவலமாக கனமழையும் பெய்தது.

பின்னர் மழை படிப்படியாக குறைந்ததால் தமிழகத்தில் தற்போது  வறண்ட வானிலை நீடித்து வருகிறது. இது மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வியட்நாம், தாய்லாந்தையொட்டியுள்ள சியாம் வளைகுடா பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வருகிறது. 

மேற்கு திசை நோக்கி காற்று விசுவதால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகிறது. வருகிற 30-ம் தேதி முதல்வர் டிசம்பர் 1-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடமாவட்டங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழையானது சராசரி அளவைக் காட்டிலும் 47 சதவீதம் குறைவாகவே பொழிந்துள்ளது. சென்னையில் இந்த சீசனில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவான 60 செ.மீ.க்கு பதில் 32 செ.மீ. மட்டுமே பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.