'நீங்க சத்தமிட்டு பேசினா ஆட்சி கலைந்திடுமா?'; 'சூப்பர் காமெடி'; எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி!
சட்டப்பேரவையில் நான் சத்தமிட்டு பேசுவதை ஒளிபரப்பினால் ஆட்சி கலைந்து விடும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், சாத்தனூர் அணையை முன்னெச்சரிக்கை விடுக்காமல் திறந்து விட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மதுரை டன்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சியான அதிமுக கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் சத்தமாக பேசியது வைரலாகி இருந்தது.
ஆட்சி கலைந்து விடும்
பின்பு அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''சட்டப்பேரவையில் மக்களுக்காக நான் பேசிக்கொண்டிருக்கும்போது நேரலையை துண்டித்து விடுவார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, சட்டப்பேரவையில் பேசுவதை காட்டுவதே இல்லை. டங்ஸ்டன் சுரங்கம் பற்றி சட்டப்பேரவையில் நான் பேசியது டிவியில் ஒளிபரப்பட்டது. அதற்கே ஸ்டாலின் ஆடிப் போய்விட்டார். சட்டப்பேரவை தொடர் முழுவதும் நான் பேசியதை ஒளிபரப்பு செய்திருந்தால் இந்த ஆட்சியே இருந்திருக்காது''என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு அதனை கண்டுகொள்ளாமல் போகும் அதிமுக மாதிரி இல்லாமல் திராவிட மாடல் அரசு சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் பதிலடி
இதனால் ஒவ்வொரு முறையும் மக்கள் எங்களை வெற்றி பெறச்செய்வதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால் அவர் வயிற்றெரிச்சலில் புலம்பிக் கொண்டே இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் கட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் ஆட்சியை விமர்சிக்க ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார்.
சாத்தனூர் அணையை எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திறந்து விட்டதாக பொய்யை பரப்பி வருகிறார். ஆனால் உண்மையில் அதிமுக ஆட்சியில் முன் எச்சரிக்கை ஏதுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் 200 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதனை எல்லாம் பொதுமக்கள மறந்து விட்டார்கள் என்று பழனிசாமி நினைக்கிறாரா?
வாழைப்பழ காமெடி போல்...
சாத்தனூர் அணை குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் விரிவான விளக்கம் கொடுத்து விட்டார். எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு முன்பாகவே டன்ஸ்டன் சுரங்கத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்று உறுதியாக தெரிவித்து விட்டோம். இப்படி இருந்தும் சட்டப்பேரவையில் சொன்னதையே மீண்டும் திரும்பத் திரும்பத் சத்தம்போட்டு சொல்லிக் கொண்டிருந்தார் பழனிசாமி.
ஒரு படத்தின் வாழைப்பழ காமெடியை போல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். நான் சத்தமிட்டு அரசை விமர்சனம் செய்ததை டிவியில் ஒளிபரப்பினால் ஆட்சியே கலைந்து போயிருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். இது என்ன ஒரு காமெடி? காலி குடம் சத்தம் போட்டால் சத்தம் அதிகமாகத் தான் வரும். நீங்கள் உருண்டு புரண்டு சத்தம் போட்டாலும் அதில் உண்மை ஒரு துளியும் கிடையாது என்று பழனிசாமிக்கு அன்புடன் சொல்லிக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லையா?
நான்கு ஆண்டுகள் ஆட்சியில் உங்களின் பதவி சுகத்துக்காக பலருக்கு துரோகம் செய்து தமிழ்நாட்டின் உரிமையை அடமானம் வைத்தது மக்களுக்கு நன்றாகவே தெரியும். மாநில அரசின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசை பார்த்து கேள்வி கேட்க உங்களுக்கும், உங்கள் கட்சியின் எம்.பிக்கும் தைரியம் இல்லை. எங்களை பார்த்து கத்தி பேசும் உங்களுக்கு ஒன்றிய அரசை பார்த்து கீச்சுக் குரல் கூட எழுப்ப தைரியம் இல்லையா'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.