'இப்ப எங்கள் இலக்கு 200 அல்ல; அதுக்கும் மேல'; விஜய்க்கு மறைமுகமாக பதிலளித்த ஸ்டாலின்!
சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இலக்கு வைத்துள்ளோம் என்று விஜய்க்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக பதில் அளித்து இருக்கிறார்.
சட்டப்பேரவை தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருகின்றன. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீவிரம் காட்டி வரும் திமுக, தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 40க்கு 40 வெற்றி என்ற இலக்கை முன்வைத்திருந்த திமுக, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 200 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''நேற்று ஈரோட்டில் கள ஆய்வு கூட்டம் நடத்தினேன். இந்த கூட்டதில் இன்னும் வேகமாக பணியாற்றும் வகையில் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் விஜய்க்கு பதில்
2026 சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் 200 என்ற இலக்கு வைத்துள்ளோம். ஆனால் ஈரோட்டில் நடநத கள ஆய்வுக்கு பிறகு நாங்கள் வைத்த இலக்கு 200ஐயும் தாண்டி விடுமோ என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். இதன்மூலம் நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு திமுக மறைமுகமாக பதிலளித்ததாக திமுக கூறி வருகின்றனர்.
ஏனெனில் சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ''சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என இறுமாப்புடன் திமுக கூறுகிறது. நீங்கள் நம்பிய கூட்டணி கணக்குகள் உங்களுக்கே மைனஸ் ஆக மாறும்'' என்று பேசியிருந்தார். விஜய்க்கு திமுகவினர் பலர் பதிலடி கொடுத்திருந்தனர்.
திமுகவினர் கருத்து
குறிப்பாக திமுக எம்.பி கனிமொழி, ''நான் இறுமாப்போடு சொல்கிறேன். திமுக கண்டிப்பாக 200 தொகுதிகளில் வெல்லும்'' என விஜய்க்கு பதிலடி கொடுத்திருந்தார். தற்போது முதல்வர் ஸ்டாலினும் 200 இல்லை அதற்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இலக்கு வைத்துள்ளதாக என்று கூறியிருப்பது விஜய்க்கு மறைமுகமாக பதில் சொல்வதுபோல் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.