பணி நியமனம் செய்ய செய்ய 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட புகாரில்  தமிழ்நாடு மாநில தலைமை கணக்காயரை சிபிஐ போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள  அக்கௌண்ட்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் சிபிஐ போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினர்.

சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு மாநில கணக் காயர்  அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த அருண் கோயல் மாநில கணக்காயராக  பதவி வகித்து வருகிறார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை திட்டங்களுக்கான தொகுப்பு நிதி முறையாக செலவிடப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வட்டங்கள் கணக்கு தணிக்கை அதிகாரிகளை இவர் நியமனம் செய்து உள்ளார்.

இப்படி சுமார் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், ஒவ்வொருவரிடமும் தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணையை வழங்கியதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறையில் உதவியாளராக பணிபுரியும் எஸ்.சிவலிங்கம் என்பவர், விழுப்புரத்தில் டிவிஷனல் கணக்காளராக பணியாற்ற விரும்பியதாகவும், இதற்காக அவரிடம் அருண் கோயல் ரூ.5 லட்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, அருண் கோயலிடம் கொடுப்பதற்காக தேனாம்பேட்டை கணக்காயர் அலுவலகத்தில் பணி புரியும் மூத்த கணக்கு அதிகாரி கஜேந்திரன் நேற்று மாலை சிவலிங்கத்திடம் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்று உள்ளார். இதற்கு திருவள்ளூரில் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் எல்.எஸ்.ராஜா என்பவரும் உடந்தையாக இருந்தார்.

தேனாம்பேட்டை கணக்காயர் அலுவலக வளாகத்தில் லஞ்ச தொகை கைமாறுவது பற்றிய ரகசிய தகவல் கிடைத்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லஞ்ச தொகை கைமாறியது தெரியவந்தது.

விசாரணையின் போது, லஞ்சமாக பெற்ற தொகையில் ரூ.3 லட்சத்தை அருண் கோயலிடம் கொடுத்துவிட்டதாக கஜேந்திரன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அருண் கோயலிடம் இருந்து அந்த தொகையை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மற்றவர்களிடம் இருந்த மீதி தொகையும் கைப்பற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநில தலைமை கணக்காயர் அருண் கோயல், கஜேந்திரன், சிவலிங்கம், எல்.எஸ்.ராஜா ஆகிய நால்வரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.