திமுக அரசு மக்கள் நலனில் அக்கறையின்றி செயல்படுவதாக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சமூக நீதி குறித்துப் பேசும் முதல்வர் ஸ்டாலின், திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
சமூக நீதியை முதல்வர் ஸ்டாலின் உண்மையாக பின்பற்றினால், மீதமுள்ள ஆட்சிக் காலத்திற்காவது திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு, போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
திமுக மீது தமிழிசை குற்றச்சாட்டுகள்
பாதாள சாக்கடைகளில் தூய்மைப் பணியாளர்கள் விழுந்து இறக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம் நடக்கின்றன. மதுரையில் விடுதியில் ஒரு மாணவர் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இங்கு சமூக நீதி இல்லையா? செவிலியர்கள் தங்கள் உரிமைகளை கேட்டபோது, அதை வழங்க மறுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அப்போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனாலும், தமிழக அரசு திருந்தவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ், ஆட்சியில் பங்கு கேட்கத் தொடங்கி உள்ளது.
திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி
சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மையாகவே பின்பற்றுகிறார் என்றால், இந்த ஆட்சியின் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
மக்கள் நலனில் அக்கறையில்லை ஜிஎஸ்டி காரணமாக பொருட்களின் விலை குறைந்து மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை நினைத்து 'இந்தியா' கூட்டணியினர் கவலையில் இருப்பதாக தமிழிசை தெரிவித்தார். மேலும், "திமுகவினர் எப்போதும் பாஜக, அதிமுக என்ன செய்கிறது, எந்தக் காரில் செல்கிறார்கள் என்பதில்தான் கவனமாக இருக்கிறார்கள். மக்கள் பிரச்சினையை கவனிப்பதில்லை. சம்பளம் கொடுக்க காசு இல்லை. ஆனால், பேனா சிலை வைப்பதற்கும், வெளிநாட்டுக்கு செல்வதற்கும் காசு இருக்கிறது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
