விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் 3000 நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT ஹேஷ்டேக்குடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டி வருகிறார். இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
இந்த நிகழ்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 3,000 தவெக நிர்வாகிகள் மட்டும் கலந்துகொள்ள உள்ளனர். விழாவில் பங்கேற்பதற்கான பாஸ் இருப்பவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக செல்போனுக்கு அனுமதியில்லை.

இந்த விழாவையொட்டி வழியெங்கும் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக மொத்தம் 6 பாயிண்ட்களுடன் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக்கும் இடம்பெற்றுள்ளது.

அதில், பெண்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக நடந்து வரும் பெரும் துயரை கண்டும், காணாத பொறுப்பற்ற தன்மை, விமர்சனத்துக்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரலை ஒடுக்கும் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம், ஆடம்பரம் மற்றும் ஆட்சியின் அவலத்தை மடைமாற்றம் செய்வதையே நம்பி வாழும் திறனற்ற நிர்வாகம்,
புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கைக்கு எதிராக போராட உறுதியேற்போம், சாமானியர்களுக்கு எதிராக வன்முறைகளை அரசியல் நோக்கோடு ஊக்குவிக்கும் வகையில் செயலற்று இருப்பது, ஒரு சிலரின் பேராசை பசிக்காக நடக்கும் திட்டமிடப்பட்ட உழைப்பு சுரண்டலும், இயற்கை வளச் சுரண்டலும் இடம் பெற்றுள்ளது.
