எல் நினோவுக்கு குட்-பை: தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன ஹேப்பி நியூஸ்!
எல் நினோவின் தாக்கம் குறைந்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்
உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு எல் நினோ எனப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக் பெருங்கடலில் பலத்த காற்று, அவற்றின் திசை மற்றும் வெப்பநிலை போன்ற காரணிகள் ஒட்டுமொத்த உலக வானிலையையே பாதிக்கிறது. அத்தகைய பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதுதான் எல் நினோ என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சராசரியாக 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எனக் கூறப்படும் எல் நினோ காலநிலை நிகழ்வானது, பசிபிக் கடல்பரப்பு வெப்பநிலையை 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் என்கிறார்கள்.
எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சியோ ஏற்படுகிறது. 1972-73, 1982-83, 1997-98 மற்றும் 2015-16-ஆம் ஆண்டுகளில், பல நாடுகள் கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற நிலைமைகளை சந்தித்ததற்கு எல் நினோ நிகழ்வுதான் காரணம். எல் நினோ காலநிலையில் தாக்கம் ஏற்படும் போதுதான் இந்தியாவில் வறட்சி நிலவுகிறது என்பதை கடந்த கால அனுபவம் காட்டுகின்றன.
அமெரிக்காவின் ஏரியா 51 உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் ஏன் யுஎஃப்ஒக்கள் அதிகமாக காணப்படுகின்றன.?
எல் நினோ விளைவால் சர்வதேச அளவில் பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, தொழில்கள் நலிந்து, நோய்கள் மலிந்து இந்த பொருளாதார தேக்கம் ஏற்படுகின்றன. இந்த நிலையில், இத்தகைய ஆபத்துமிக்க எல் நினோவின் தாக்கம் குறைந்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் சூப்பர் எல் நினோ உலகைத் தாக்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA - National Oceanic and Atmospheric Administration) கணித்த நிலையில், அதன் 30 ஆண்டுகால மாறுபாட்டை சுட்டிக்காட்டி, எல் நினோவிற்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குட்பை தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரவுள்ள தென்மேற்கு பருவமழையின் போது காவிரியில் தண்ணீர் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானின் இந்த பதிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.