இந்தியாவில் பசியே இல்லாத மாநிலம் தமிழகம் தான் என அமைச்சர் செல்லூர் ராஜு கெத்தாக தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்திலுள்ள ஒண்டிப்புதூரில் சிந்தாமணி கூட்டுறவு சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள 3 திருமண மண்டபங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர்  நேற்று திறந்துவைத்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,  தமிழகம் திராவிட பூமி. மாநில சுயாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய மாநிலமாகவும், அதே சமயத்தில் மத்தியில் எந்தக் கட்சி ஆண்டாலும் அவர்களுடன் இணக்கமாக சென்று தமிழகத்திற்கு தேவையான நிதிகள் மற்றும் திட்டங்களை பெற்றுக் கொண்டுவருகிறோம் என கூறினார்.

மேலும் பேசிய அவர், தற்போது மழை நன்றாகப் பெய்துவருகிறது, விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தை மாநிலக் கட்சிகள்தான் ஆளும்” என்றும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தன்னைப் பற்றி போடப்படும் மீம்ஸ்கள் பதிலளித்த  அவர், “இதையெல்லாம் ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.  இவர்கள் போடும் இந்த மீம்ஸ் மூலமாக அனைவரின் மனதிலும் பதிகிறோம். ஆனால் எங்களின் நோக்கம் நல்ல நோக்கம்” என்று தெரிவித்தார். தமிழகத்தில் பசியே இல்லை. இந்தியாவிலேயே பசியில்லா மாநிலம் தமிழகம்தான். இதேபோல பல திட்டங்களை எங்கள்  ஆட்சியில்  கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே மீண்டும் நாங்கள்தான்  ஆட்சியமைப்போம் என கெத்தாக பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.