அடுத்த 2 வாரங்களில் கொரோனா அதிகரிக்கும்... தமிழக மக்களுக்கு.. எச்சரிக்கை விடுத்த ராதாகிருஷ்ணன்
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிவில் சர்விஸ் பயிற்சிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பயமுறுத்த கூறவில்லை, படிப்படியாக எண்ணிக்கை ஏறுவது கவலை அளிக்கிறது, நோய் பரவல் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் அதை எதிர்கொள்ள மறுபுறம் மருத்துவ கட்டமைப்புகளை தமிழக முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கண்காணித்து வருகிறார்கள்.
ஒமிக்ரான் என்பது மிக வேகமாக பரவக் கூடிய தன்மை படைத்த உருமாறிய கொரோனா. தடுப்பூசி போட்டிருந்தால் அதிக பாதிப்பிருக்காது என்பது அரசு கணித்த தகவல் ஆனால் இதன் எண்ணிக்கை ஏறி தான் இறங்கும். தற்போது 2 தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் வருகிறது.
ஆனால், அதில் நுரையீரல் பாதிப்புகள் அதிக அளவில் இல்லாமல் குறைவாக உள்ளது எனவும் டெல்டா இன்னும் தமிழகத்தில் முழுமையாக போகவில்லை. ஒமிக்ரான் போன்றவற்றிற்கு தடுப்பூசி மற்றும் முககவசம் போடுவதே முழுமையான பாதுகாப்பு. முதல்வரே நேரடியாக அலையில் இறங்கி முககவசம் அளிக்கிறார்.
எனவே, பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை தங்கள் கடமையாக நினைத்து பின்பற்ற வேண்டும் என்று கூறிய அவர் மற்ற நாடுகளிலும் மாநிலங்களிலும் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதில் தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருக்காது எனவே ஏற்றத்தை குறைத்து பரவலை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. முககவசம் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே இதை முறியடிக்க முடியும். 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு இதுவரையில் 1 லட்சம் வரையிலும் போடப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் கூடுதல் முகாம்களை அதிகரிக்க மாவட்ட ஆட்சியருக்கு சுதந்திரம் அளித்துள்ளோம்.ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் ஒமைக்கரான் பரவல் அதிகமாகி பின்னரே குறையும், இதை பொது மக்கள் மனதில் வைத்துக் கொண்டு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பேருந்துகளில் கூட்டமாக போவது, பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் போடுவது எளிமையான வழிமுறையென நினைக்காமல் அது வலிமையான வழிமுறை, அதே போல் நாங்கள் கெஞ்சும் நிலையை வைக்காமல் தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் மிஞ்சும் நிலையில் மக்களும் இருக்க கூடாது’ என்று கூறினார்.