Asianet News TamilAsianet News Tamil

போதை பொருள் கிடங்காக மாறிய தமிழகம்! காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார்? இந்து முன்னணி!

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருள் கடத்தலில் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படுவது இது முதன்முறை அல்ல.

Tamil Nadu has become a drug warehouse! hindu munnani state president Kadeswara Subramaniyam tvk
Author
First Published Apr 28, 2024, 1:00 PM IST

போதைக்கு எதிராக அரசை அழுத்தம் கொடுத்து செயல்பட வைக்க மக்கள் போராட்டம் தவிர வேறு வழியில்லை என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுகவைச் சேர்ந்த ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ் தனக்கு சொந்தமான காரில் 600 கிலோ குட்கா கடத்தியது சிவகிரி சோதனை சாவடியில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி தென்காசி மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இருவரும் ஆளுகின்ற திமுக கட்சியைச் சார்ந்தவர்கள். இவர் மீது இதே போன்ற குற்றத்துக்காக பல மாவட்டங்களில் மற்றும் அண்டை மாநிலங்களில் பல வழக்குகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருள் கடத்தலில் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படுவது இது முதன்முறை அல்ல.

 கடந்த நவம்பர் மாதம் கீழக்கரை முன்னாள் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது சகோதரர் 19வது வார்டு கவுன்சிலர் இருவரும் இலங்கைக்கு போதை பொருளுக்கான மூலப் பொருட்களை கடத்துகின்ற போது கைது செய்யப்பட்டார்கள். பின்பு அந்த மூலப் பொருள் விவசாயத்திற்கான உரத்துக்கான மூலப்பொருள் என்று வழக்கு மாறிப்போனது மாபெரும் மர்மம். போதை கடத்தலில் கைதாகும் நபர்களின் சட்டவிரோத செயல்பாடு தமிழகம் மட்டுமல்லாது, நமது நாட்டின் பல பகுதிகளிலும், ஏன் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கும் உலக அளவிலான நெட்வொர்க் உடன் விரிந்து பரந்து உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது தமிழகம் எதிர்நோக்கும் பேராபத்தை எடுத்து காட்டுகிறது திமுக அயலக அணி பதவியில் இருந்த ஜாபர் சாதிக் 2000 கோடி போதை பொருள் கடத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இங்கே குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் தவிர ஏராளமான போதை பொருள் கடத்தல்களில் ஆளுங்கட்சி திமுக பிரமுகர்கள் சம்பந்தப் பட்டிருப்பது அவ்வப்போது செய்திகளில் வெளியாகி வருகிறது. 

தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்றைக்கு ஒரே நாளில் 2500 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கும் செய்தி. தமிழகம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. ஆன்மிகம் வளர்த்த வளர்க்கும் ஆன்மீக பூமி தமிழகம். அதேபோல இன்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பே நீதி நூல்கள் உலகத்துக்கே வழிகாட்டும் திருக்குறள் அதில் கள்ளு உண்ணாமையை வலியுறுத்தும் குறட்பாக்கள் என மனிதனை சமூகத்தை நல்வழிப்படுத்தி ஆக்கபூர்வமான அறிவுப்பூர்வமான சமூகமாக மாற்றிய தலைசிறந்த கலாச்சாரம் கொண்டது நம்முடைய தமிழகம். ஆனால் இன்றைய நிலைமை அப்படியே தலைகீழாக மாறி கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று கல்வியை முன் நிறுத்திய காலம் கடந்து பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் கூட மது மற்றும் பலவிதமான போதைப் பொருள்களுக்கு அடிமையாகி தெருவில் வீழ்ந்து கிடக்கும் அவலமான நிலை ஏற்பட்டுள்ளது. 

கல்வி பயிலும் வளர் இளம் பருவத்தினரும் இளைஞர்களும் போதைக்கு அடிமையாவது நாட்டு நலனுக்கு மட்டுமல்ல அவர்களின் வீட்டையும் எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் முழுமையாக அழித்துவிடக்கூடியது. எப்போதோ எங்கோ ஒரு போதையால் சண்டை சச்சரவு கொலை நடப்பது மாறி இன்றைக்கு தினமும் பத்திரிகை முழுவதும் போதையால் நடக்கும் குற்ற செயல் செய்திகளால் நிரம்பி கிடப்பதை காண்கிறோம். இவ்வாறான அவலமான நிலை திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் நடந்தேறி உள்ளது. இன்னமும் இரண்டாண்டு ஆட்சி காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நினைக்கும் போது மிகுந்த அச்சம் ஏற்படுகிறது. 

கல்வி பயிலும் மாணவர்களும் இளைஞர்களும் இந்த நாட்டின் ஈடு இணையற்ற மனித வளம் நாட்டின் எதிர்காலம் நாட்டின் பொருளாதார வளம் அப்படிப்பட்டவர்கள் போதைக்கு அடிமையாகி உடல் நலத்தையும் நாட்டு முன்னேற்றத்தையும் கெடுத்துக் கொள்வது நாட்டு நலனுக்கு உகந்ததல்ல பலவேறு போதை கடத்தல் விற்பனை பின்புலத்தில் ஆளும் திமுகவினர் ஈடுபட்டு கைதாகி உள்ளனர் போதை கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஆகியோருடன் நெருக்கமாக இருந்ததும் திமுகவில் உயரிய பொறுப்பில் இருந்ததும் செய்திகளில் வெளியாகி உள்ளது. அதேபோல தொடர்ச்சியான கைதுகள் சட்டவிரோத போதை பொருள் விவகாரத்தில் திமுகவினர் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்களோ? அதற்கு கட்சித் தலைவரும் முதல்வரும் கண்டும் காணாமல் இருக்கிறார்களோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. 

போதை கடத்தல் மட்டுமல்லாமல் கனிமவள சுரண்டல்களிலும் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வருகிறது. ஒருபுறம் இளைஞர் சமுதாயம் போதைப் பொருட்களால் நாசமாகும் நிலையில் மறுபுறம் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு கடத்தப்படுவது தமிழகத்தை அழிவின் விளிம்பில் இட்டுச் சென்றுள்ளது ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கும் இளைஞர் நலனும் கனிம வளங்களும் ஆபத்தான கட்டத்தை தாண்டி செல்வது கண்கூடாக தெரிகிறது.. போதை கடத்தலின் பின்புலத்தில் பயங்கரவாதம், ஹவாலா போன்ற தேசத்தை அச்சுறுத்தும் செயல்பாடுகள் இருப்பதை மாநில அரசு உணர வேண்டும். காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறாரோ.? என்றே எண்ணத் தோன்றுகிறது. 

எனவே போதைப் பொருட்களின் கிடங்காக மாறிப்போன தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டியது நாம் அனைவரின் கடமை. அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள முதல்வர் அவர்கள் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஓய்வெடுக்க வெளிநாடு செல்வது மாபெரும் துரதிஷ்டம். போதைக்கு எதிரான மக்கள் போராட்டம் உடனடி தேவையாகும் அரசை அழுத்தம் கொடுத்து செயல்பட வைக்க மக்கள் போராட்டம் தவிர வேறு வழியில்லை எனவே மக்கள் பகிரங்கமாக போதை பொருட்களுக்கு எதிராக செயலற்ற அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios