Trichy SRM Hotel | திருச்சியில் செயல்பட்டு வந்த பிரபல SRM ஹோட்டல் நிலுவை தொகை செலுத்தாத காரணத்தால் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஹோட்டலை கையகப்படுத்தி உள்ளது.
திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் செயல்பட்டு வந்த பிரபல SRM ஹோட்டல் அமைந்துள்ள 4.70 ஏக்கர் நிலம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமானது. இந்த இடத்தை கடந்த 1994ம் ஆண்டு 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் SRM நிறுவனத்திற்கு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் வழங்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.47.93 கோடி குத்தகையாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் நிறுவனம் சார்பில் வெறும் ரூ.9.08 கோடி மட்டுமே செலுத்தப்பட்டது. மீதமுள்ள ரூ.38.85 கோடி தொகையை செலுத்தாமல் ஹோட்டல் நடத்தப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆண்டு குத்தகை காலம் நிறைவு பெற்றது. குத்தகை நிறைவு பெற்ற தினமே ஹோட்டலை கையகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் வந்தனர். இதனால் அதிகாரிகள், ஹோட்டல் நிர்வாகத்தினர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
மேலும் 6 வார காலத்திற்குள் குத்தகைத்தொகையை தமிழக அரசுக்கு நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் நிறுவனம் பணம் செலுத்தாத நிலையில் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் கையகப்படுத்தினர். அரசின் நடவடிக்கையை எதிர்த்து தனியார் நிறுவனம் தரப்பில் மீண்டும் அவசர அவசரமாக உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
