Asianet News TamilAsianet News Tamil

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல கிராமங்கள் துண்டிப்பு; அரசுக்கு சீமான் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, விரைந்து பேருந்து வசதி செய்து தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

tamil nadu government should build a roads in south districts of tamil nadu said seeman vel
Author
First Published Jan 4, 2024, 6:49 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மாஞ்சோலை செல்வதற்கான மலைச்சாலை முற்றாகச் சேதமடைந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டச் சாலைகளைச் சீரமைப்பதில் தமிழ்நாடு அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தென்மாவட்டங்களில் அண்மையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கான கிராமங்களின் சாலைகள் சேதமடைந்து மக்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள முக்கியச் சுற்றுலாத்தலமான மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றியுள்ள காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலைத் தோட்டப் பகுதிகளில் ஏறத்தாழ 3000 மக்கள் வசித்து வருவதுடன், தோட்டப்பணிகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த மலைப்பகுதிக்குப் பயணித்தும் வருகின்றனர்.  

அரியலூரில் டாஸ்மாக் கடைக்கு அதன் பெண் உரிமையாளரே பூட்டு போட்டதால் பரபரப்பு

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்த மணிமுத்தாற்றிலிருந்து மாஞ்சோலை செல்லும் முதன்மை மலைச்சாலை அண்மையில் பெய்த கனமழையால் முற்று முழுதாகச் சேதமடைந்து பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தின் இதரப் பகுதிகளிலிருந்து மாஞ்சோலை மலைப்பகுதி துண்டிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டுள்ளதால், மாஞ்சோலை பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவியர்கள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் என அனைத்துத்தரப்பு பொதுமக்களும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவதியுற்று வருவதுடன் தேயிலைத் தோட்டப் பணிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். 

சென்னை - நாகர்கோவில் - சென்னை; வந்தேபாரத் ரயிலை தினமும் இயக்க பயணிகள் கோரிக்கை

மேலும், வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஒரே ஒரு வாகனத்தில் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதிலும் எளிய மக்களால் பயணிக்க முடியவில்லை. மாஞ்சோலை மலைச்சாலையைச் சீரமைக்கக்கோரி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால்,  வனத்துறையைக் கைகாட்டி தங்கள் பொறுப்பினைத் தட்டிக்கழிக்கின்றனர். வனத்துறையை அணுகினாலோ  அவர்கள் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என்று அலட்சியப்படுத்துகின்றனர். அடிப்படை வசதி கோரிய மக்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதால் செய்வதறியாது தவித்துப்போயுள்ளனர். சாலையைச் செப்பனிட்டு போக்குவரத்தைச் சரிசெய்து கொடுத்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் பலமுறை மனு அளித்தும் மக்களின் துன்பத்தை வேடிக்கைப் பார்ப்பதென்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுமையாகும் 

ஆகவே, தமிழ்நாடு அரசு மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து விரைந்து பேருந்து வசதியைச் சரிசெய்துகொடுத்து மாஞ்சோலை மக்களின் துயர் தீர்க்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios