தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த பல ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலை நகர் சென்னையில் முகாமிட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,
பள்ளிக்கல்வித்துறை அலுவலகம், சென்னை எழிலகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் போராட்டம் ஒருபுறம் நடைபெறும் நிலையில், மற்றொருபுறம் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல தரப்பினரும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு சார்பில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உட்பட துறை ரீதியான மூத்த அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பேச்சுவார்த்தை முடிவில் தங்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படாத பட்சத்தில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஆசிரியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


