Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு! விருதாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு!

இந்த ஆண்டு மட்டும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக மேலும் 3 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது கொடுக்கப்படுகிறது.

Tamil Nadu Government Ilakkiya Mamani Award Announced! Prizes of Rs. 5 lakh each for the awardees! sgb
Author
First Published Jan 25, 2024, 4:25 PM IST

தமிழ் மொழிக்கு சிறப்பான பங்களிப்பு செய்த அறிஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளில் 3 பேருக்கு வழங்கப்படும் இந்த விருது தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகையையும் உள்ளடக்கியது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் என மூன்று பிரிவுகளின் கீழ் சிறப்பான படைப்புகளை எழுதிய தமிழ் அறிஞர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022, 2023ஆம் ஆண்டுகளில் இலக்கிய மாமணி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள விருதாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு. சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாகப் பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. 

அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியமாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை அளித்தும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப் பெறுவார்கள்.

இலக்கியமாமணி விருது 2022ஆம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க. இராமலிங்கம் (மரபுத்தமிழ்), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம் (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் (மா.மருதாச்சலம்) (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி அர்ஜீணன் (மரபுத்தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர. திருவிடம் (ஆய்வுத்தமிழ்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த க. பூரணச்சந்திரன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டிற்கு இலக்கியமாமணி விருதிற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச. நடராசன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்"

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios