ரிசர்வ் வங்கியின் புதிய தங்கக் கடன் விதிகள் தமிழக விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.
தமிழக டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய தங்கக் கடன் விதிகள் குறித்து கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த விதிகள் விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களின் நலன்களுக்கு எதிரானவை என்றும் எப்போதோ வாங்கிய கடன்களுக்கு ரசீது கேட்பது அர்த்தமற்றது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய விதிகளும் பாதிப்பும்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்க நகை கடன்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. தங்க நகைகளை அடகு வைத்து பெறப்படும் கடனுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை வட்டி மட்டும் செலுத்தி கடனை புதுப்பிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடன் காலம் முடிந்தவுடன், அசல் தொகையுடன் வட்டியையும் முழுமையாக செலுத்தி, நகையை மீட்ட பிறகு மட்டுமே, மறுநாளில் புதிய கடன் பெற முடியும். தங்க நகையின் உரிமையாளரை உறுதிப்படுத்தும் பின்புல சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு
இது போன்ற கட்டுப்பாடுகள் விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நலன்களுக்கு எதிரானவை என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. விவசாயிகள் அவசர தேவைகளுக்கு தங்க நகை கடனையே நம்புகின்றனர் என்றும் புதிய விதிமுறைகள் அவர்களை கந்துவட்டிக்காரர்களிடம் தள்ளும் அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளன
இந்த நிலையில் ஆர்பிஐயின் விதிமுறைகள் விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் விதமாகவே புதிய விதிகள் உள்ளன என்றும் பெரும்பாலானவர்கள் நெருக்கடியான சூழலில் தங்கத்தை அடகு வைத்து பணம் பெறுகிறார்கள் என தெரிவித்துள்ள விவசாயிகள் பாட்டி, பாட்டனாரிடமிருந்து வந்த நகைகளுக்கு ரசீது எங்கு கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விதிகள் விவசாயிகளின் நலன்களுக்கு புறம்பானவை எனவும் இதனை உடனடியாக ரத்து செய்யப்படாவிட்டால் நாங்கள் போராட்டத்திற்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
போராட்டம் அறிவிப்பு
புதிய விதிகளின் கீழ், நகைக்கு வாங்கிய ரசீது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது எனவும் நகையின் மதிப்பின் 75% மட்டுமே கடனாக வழங்கப்படலாம் என்பது அநியாயமானது என்றும் தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார். இயற்கை மாற்றத்தால் பயிர்கள் சேதமடையும் காலங்களில், விவசாயிகள் முழு கடனையும் தவணையாக திருப்பிச் செலுத்த முடியாது என குறிப்பிட்ட அவர, முந்தைய நடைமுறையை மீட்டெடுக்க வேண்டும் தெரிவித்தார். இது தொடர்பாக ஜூன் 3ம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய தங்கத்தை அடகு வைக்கிறார்கள் என்பதையே புரிந்துகொள்ளாமல், ரசீது போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிப்பது முற்றிலும் நியாயமற்றது. அரசு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த விதிகளை மீளாய்வு செய்து திரும்ப பெற வேண்டும் என்பது பலர் கருத்து.
