வடமாநிலத்தவர்களை நேரில் சந்தித்து தைரியம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்; தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கன்னியாகுமரி சென்றிருந்தார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் வழியில் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசுவதால் அவர்கள் கொலை செய்யப்படுவதாகவும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன. இதன் விளைவாக பீகார் மாநில அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு செய்து சமூக வலைதளங்களில் பரவும் வீடியோகள் அனைத்தும் பொய்யானவை. தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர்.
வெளி மாநில தொழிலாளர்களுக்கு எதிரான விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் முழு திருப்தி அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவல்கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
அப்போது அவர்களிடம் உணவு, இருப்பிடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும் சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “காவல்கிணறு பகுதியில் கையுறை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுடன் உரையாடினேன். அவர்களிடம் சகோதரவுணர்வும் தமிழ்நாட்டில் பணிபுரிகிறோம் என்ற பாதுகாப்புணர்வுமே மேலோங்கியுள்ளது. இதுதான் தமிழ்நாடு! உழைப்பவர்க்கு என்றும் உறுதுணையாக இருப்பதே நம் பண்பாடு” என்று குறிப்பிட்டுள்ளார்.