சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மத்திய தொல்லியல்துறை மூலம் நடத்தப்படும் அகழாய்வு இடத்தை திரைப்பட இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன், ஜனார்த்தனன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர்,

தமிழர்களின் அடையாளம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழர்களின் ஏரி, குளங்கள் அழிந்து வருகிறது. ஜல்லிக்கட்டிற்கும் தடை விதிக்கப்பட்டு விட்டது.

இதில் தற்போது 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்க்கை அடையாளமும் சேர உள்ளது. உலகத்திலேயே தொன்மையான நாகரீகம் தமிழர் நாகரீகம் அதற்கான சான்று தற்போதுதான் கிடைத்துள்ளது.

குறுகிய இடத்திலேயே 6ஆயிரத்திற்கும் அதிகமான சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு உள்ள 110 ஏக்கர் பரப்பளவிலும் ஆய்வு நடக்கும்பட்சத்தில் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த இடத்திலேயே அருங்காட்சியகம் அமைத்து கிடைத்த பொருட்கள் அனைத்தையும் காட்சிப்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் நாகரீகம் வெளியில் தெரியவரும், அடுத்த மாநிலத்திற்கு கொண்டு செல்வதால் தமிழர்களின் அடையாளம் மறைக்கத்தான் முயற்சிகள் நடைபெறும. எனவே மாநில அரசு இங்கேயே அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.