இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் கிணற்றுத் தண்ணீரை எடுத்துச்சென்று தனியார் விடுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்டித்து டேங்கர் லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்டது மெய்யம்புளி. இந்தப் பகுதியில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக கிணறு ஒன்று இருக்கிறது. 

இந்தப் கிணற்றில் இருந்து டேங்கர் லாரி மூலம் தண்ணீர் எடுத்து, தனியார் விடுதிக்கு விற்பனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இதற்கு மக்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தனர். மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் நேற்று அந்த கிணற்றில் இருந்து மீண்டும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் எடுத்து, தனியார் விடுதிக்கு விற்பனைக்கு கொண்டுச் செல்லப்பட இருந்தது. அப்போது அங்கு திரண்ட மக்கள் டேங்கர் லாரியை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே, அங்கிருந்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து தங்கச்சிமடம் காவலாளர்கள் தகவலறிந்து போராட்டக் களத்திற்கு வந்தனர். பின்னர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவலாளர்கள் உறுதியளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.