ஆசிரியர் ஒருவர் மது போதையில் சரிந்து விழுந்து உருண்டு புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மது குடித்து மதி இழந்த ஆசிரியருக்கு தண்ணிர் தெளித்தும் போதை தெளியாத பின்னணி

சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளியில் 8 ஆசிரியைகள் உள்பட 13 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு திருவேகம்பத்து கிராமத்தை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக மது போதையில் பள்ளிக்கு வருவதாக புகார் இருந்து வந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி அளவில் வெளியில் சென்று விட்டு மது போதையில் தட்டு தடுமாறி பள்ளிக்குள் நுழைந்தார் உடற்கல்வி ஆசிரியர் ரஜினிகாந்த். ஓய்வு அறைக்குள் சென்ற குடிகார வாத்தியார் ரஜினிகாந்தை கண்டதும் அங்கிருந்த ஆசிரியைகள் அலரியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நிற்க கூட இயலாமல் தட்டு தடுமாறிய ஆசிரியர் ரஜினிகாந்த் கீழே சரிந்து விழுந்து மட்டையானார். தகவல் அறிந்து தலைமை ஆசிரியை பொறுப்பில் இருந்த கணித ஆசிரியை தலைமையில் உள்ளே சென்ற ஆசிரியர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து போதையை தெளிய வைக்க முயன்றனர்.

ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் உருண்டு புரண்ட ரஜினிகாந்த் எழுந்திருக்கவில்லை, 3 ஆசிரியர்கள் சேர்ந்து அவரை தூக்கி அங்குள்ள இருக்கை ஒன்றில் வைத்தனர் .முகத்தில் தண்ணீர் தெளித்தும் போதை தெளியாததால் முதன்மை கல்வி அலுவலர் சபீதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் கடைசி வரை அந்த பள்ளிக்கூடம் பக்கமே வரவில்லை. போதை மயக்கத்தில் இருக்கையில் இருக்கமாக அமர்ந்திருந்தார் வாத்தியார் ரஜினிகாந்த். 111 மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், குடி போதையில் உருண்டு புரண்டு குடிகார வாத்தியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.