ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி விட்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இதனால் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

மதுரை, அவனியாபுரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, புதுவை, செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில்  ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழக்கில் இன்று நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில்,  ஜல்லிக்கட்டு சம்பந்தமான தீர்ப்பை, தற்போது அளிக்க முடியாது. தீர்ப்பை எழுதி வருவதால், பொங்கல் கழித்துதான், தீர்ப்பு அளிப்போம் என்று உச்சநீதிமன்றம், சற்று முன் அறிவித்தது. இதனால் அதிர்ந்துபோன தமிழர்கள்  தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகரும், இயக்குனருமான, டி,ராஜேந்தர், மத்திய அரசு தமிழர்களை இழிவாக கருதுவதாக கொந்தளித்தார்.

இவர்கள் எல்லாம் இழித்தவாயர்கள், இவர்களால் என்ன செய்ய முடியும் என மத்திய அரசு நினைக்கிறதா என்று கேள்வி எழுப்பிய டி.ராஜேந்தர், போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.