t rajendar talks about gst

பாஜக அரசு, மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மகிழ்ச்சியை தரவில்லை என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.

நாடு முழுவதும் நேற்று நள்ளிரவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. முன்னதாக இந்த சேவை வரிக்கு அரசியல் கட்சியினர், வியாபாரிகள், வணிகர்கள் உள்பட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திரைத்துறையில் டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்தார். அதை தொடர்ந்து நடிகர் கமலஹாசன், ஜிஎஸ்டி அமல்படுத்தினால், திரைத்துறையில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார். இதனால், சினிமா துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் கமலஹாசனை பாராட்டி பேசினார். அதே நேரத்தில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசையும் விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் நேற்று இரவு ஜிஎஸ்டி சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என திரைத்துறையினரிடம் கேட்டு கொண்டேன். ஆனால், அதில் யாரும் வாய் திறக்கவில்லை. இப்போது, தியேட்டரை மூடி போராட்டம் நடத்துகிறார்கள். அதற்கு, அனைத்து தரப்பினரும் ஆதரவு தருகின்றனர்.

இதை நான் அறிவுறுத்தியபோதே செய்து இருக்கலாம். அதை மறுத்துவிட்டனர். அதில், ஒரு மனிதர் மட்டும் நான் கேட்டு கொண்டதை ஏற்று கொண்டார். பகிரங்கமாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த நடிகர் கமல் மட்டுமே. அவர் மட்டும் மத்திய அரசை எதிர்த்து பலமாக குரல் கொடுத்தார்.

அதை நான் பாராட்டி பதிவு செய்தேன். எனக்கும், கமலுக்கும் வேறுபாடு, மாறுபாடு, முரண்பாடு இருக்கலாம். ஆனால், ஜிஎஸ்டி விஷயத்தில் அவரை நான் மதிக்கிறேன். ஆனால், தமிழ் திரையுலகம், ஏன் காலம் கடந்து போராடுகிறது. நேற்று இரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட பிறகு, போராட்டத்தில் குதிக்கின்றனர்.

மோடி அறிவித்துள்ள இந்த ஜிஎஸ்டியால், விலைவாசி உயர்வு அதிகரிக்கும். சாதாரண மக்களின் வாழ்வை பாதிக்கும். நாட்டின் நிலை மாறிவிடும். மோடி தலைமையிலான அரசு வந்தது முதல், வரி வரி என மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மகிழ்ச்சியை தரவில்லை.

இந்தி திரையுலகத்தை மட்டும் வாழ வைக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில் மாநில மொழி திரைப்படங்களை ஒடுக்கவே பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.