கும்மிடிப்பூண்டி பகுதியில் பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துகள், போதுமான அளவு சுகாதார துறையினரிடம் உள்ளன. எனவே, பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி இருளர் சமுதாய காலனியில் மர்மக் காய்ச்சலால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும் தொற்று நோய் அறிகுறி இருப்பதால், மருத்துவக் குழுவினர் அங்கு முகாமிட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இருளர் சமுதாய காலனியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவர் கூறியதாவது:

“இப்பகுதியில் தொற்று நோய் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இப்பணிகள் இன்னும் இரண்டு, மூன்று நாள்கள் நடைபெறும்.
இப்பகுதியைச் சேர்ந்த 13 பேர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், 13 பேர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் ஒரு குழந்தைக்கு "எச்-1 என்-1' எனப்படும் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.  அக்குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்நோயை குணப்படுத்தும் மருந்துகள், போதுமான அளவு சுகாதார துறையினரிடம் உள்ளன.

மாவட்டந் தோறும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பன்றிக்காய்ச்சல் நோய் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றுக் கூறினார்.

இந்த ஆய்வின்போது, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, எம்எல்ஏக்கள் சிறுணியம் பலராமன் (பொன்னேரி), கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி), பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.