நண்பர்களுடன் ஏரியில் குளித்த ஓட்டல் ஊழியர், தண்ணீரில் மூழ்கி பலியானார்.
திருவள்ளூ மாவட்டம் திருநின்றவூர், அண்ணாநகர் கிழக்கு, ராஜீவ் காந்தி 2வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் லோகேஷ் (19). திருநின்றவூர் பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை சக ஊழியர்களுடன் நத்தம்மேடு பகுதியில் உள்ள ஏரியில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற லோகேஷ் தண்ணீரில் தத்தளித்தபடி நீருக்குள் மூழ்கினார். இதைப் பார்த்ததும் சக ஊழியர்கள் லோகேஷை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து திருநின்றவூர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். திருவூர் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து, ஏரிக்குள் இறங்கி லோகேஷை தேடினர்.
இரவு 9.45 மணியளவில் லோகேஷின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
