பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தமிழக ஏடிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதந்தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திமுகவிற்கு அடுத்தடுத்து அம்புகளை ஏவும் அதிமுக..! தமிழக முழுவதும் போராட்டத்திற்கு தேதி குறித்த இபிஎஸ்

வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிபிசிஐடி போலீசார், 127 சாட்சிகளை விசாரித்து, 73 ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரம்குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆறு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜேஷ் தாஸுக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்த விழுப்புரம் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.