Supreme Court orders central government

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் மனுவுக்கு இன்னும் 2 வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற அறிவு, நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக
குறைக்கப்பட்டது. இவர்கள் 7 பேரும் வேலூர், புழல் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். தண்டனைக்காலம் முடிவடைந்தும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. 

நளினி, முருகன் உள்பட அந்த 7 பேர்களையும் விடுவிக்கலாம் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கும் தீர்மானம் அனுப்பப்பட்டது. மத்திய அரசு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் தீர்த்துப்போனது.

இந்த நிலையில் பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் பேரறிவாளனை பரோலில் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு மனு செய்தார். அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. அதேநேரத்தில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

அற்புதம்மாள் கோரிக்கையானது விதிமுறைகளின்படி இருப்பதால் தமிழக அரசின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனை ஏற்று பேரறிவாளன் ஒருமாத காலம் பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை பேரறிவாளன் அடைக்கப்பட்டிருக்கும் வேலூர் மத்திய சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வந்ததும் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், பரோலில் ஒரு மாத காலத்திற்கு விடுவிக்கப்பட்டார். பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் போலீஸ் வேனில் பாதுகாப்புடன் தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு
வந்தார். இதற்கிடையில், பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலை சரியில்லாததால், மேலும் ஒரு மாதம் பரோலை நீடிக்க அற்புதம்மாள் மீண்டும் மனு அளித்திருந்தார். இதையடுத்து பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பரோல் முடிந்த நிலையில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தமக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதாகஅதில் கூறப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளாக தாம் சிறையில் இருப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார். பெல்ட் குண்டு தயாரித்ததாக கூறப்படுபவர் இன்றும்
இலங்கையில்தான் உள்ளார் என்றும், குண்டு தயாரித்தவர் கைதாகாத நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்கவும் பேரறிவாளன் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன் மனுவுக்கு இன்னும் 2 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.