Supreme Court dismisses Amruta petition
மறைந்த ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பெங்களூரைச் சேர்ந்த அம்ருதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இது தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தை நாடவும் அம்ருதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா (எ) அம்ருதா உச்சநிதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான், ஜெயலலிதாவின் மகள் என்றும், இதனை நிரூபிப்பதற்கு எனக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மஞ்சுளா, ஜெயலலிதாவின் உடலுக்கு வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை என்பதால் வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அம்ருதா தனது மனுவில் கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஜெயலலிதாவின் மகளாக பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தை ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதற்காக இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.

எனது வளர்ப்பு தாயான ஜெயலலிதாவின் சகோதரி ஷைலஜா 2015 ம் ஆண்டு இறந்து விட்டார். வளர்ப்பு தந்தையான சாரதி இந்த ஆண்டு மார்ச் 20 ம் தேதி இறந்து விட்டார். இவ்வாறு அம்ருதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அம்ருதாவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அம்ருதாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தனர். பெங்களூரு நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
