ஆன் லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்.! தடை சட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் -ராமதாஸ்
ஆன் லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் தமிழக அரசு நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆன் லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்
ஆன்லைன் சூதாட்டத்தால் நாள்தோறும் தொடர் தற்கொலைகள் நடைபெற்று வருகிறது, கடந்த 10 மாதங்களில் 25 தற்கொலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இன்றைய காலத்தில் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் அதிகளவில் ஆன் லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை நிகழ்வுகளும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன் லைன் சூதாட்ட நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து அந்த சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்த காரணத்தால் அதிகமான அளவில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டிய சட்டம் திருத்தம் தொடர்பாக முடிவெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்துள்ளது. இந்த குழு இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என கூறப்பட்டது. இந்தநிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக வல்லுனர் குழுவுக்கு அளிக்கப்பட்ட இருவார அவகாசம் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், அக்குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை! ஆன்லைன் சூதாட்டத்தின் தீய விளைவுகளும், அதை தடை செய்ய வேண்டியதன் தேவைகளும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை தான். தடை தாமதமாகும் ஒவ்வொரு நாளும் புதிய தற்கொலைகள் நிகழக்கூடும். வல்லுனர் குழு அமைக்கப்பட்ட பிறகு ஒருவர் தற்கொலை செய்து கொண்டதே இதற்கு சாட்சி! எனவே, வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெறுவதில் எந்த தாமதமும் செய்யக்கூடாது. உடனடியாக குழுவின் அறிக்கையைப் பெற்று நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இதையும் படியுங்கள்