Asianet News TamilAsianet News Tamil

பொங்கலுக்கான கரும்பினை இவர்களிடம் இருந்து தான் கொள்முதல் செய்ய வேண்டும்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

sugarcane for pongal has to be procured from farmers said tn govt
Author
Tamilnadu, First Published Jan 4, 2022, 2:25 PM IST

பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும்  வகையில், 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கரும்பும் சேர்த்து வழங்க, தமிழக அரசு உரிய ஆணையினை ஏற்கெனவே பிறப்பித்துள்ளது. அதன்படி கரும்பு கொள்முதலை இறுதி செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கல் அமைக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெற்று  வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு நேரடியாக விவசாயிகளிடம் இருந்துதான் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுக்குறித்த தெளிவான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பபட வேண்டும், கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ.33 ஆக இருக்க வேண்டும் (போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் உட்பட). கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும். நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக் கூடாது.

sugarcane for pongal has to be procured from farmers said tn govt

அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  இதில் விவசாயிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது. இந்த வருடம் கரும்பு கொள்முதல் விலை  10% அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு விவசாயிகளிடம் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட விலையைவிட கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.  எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு கொள்முதல் செய்த விலையையோ அல்லது அதற்கு குறைவாகவோ விலை நிர்ணயம் செய்யப்படக் கூடாது. கரும்பு கொள்முதல் செய்யும்போது, அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். எந்தெந்த நாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும்.  எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக் கூடாது.  

sugarcane for pongal has to be procured from farmers said tn govt

அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. கொள்முதல் செய்யப்படும் கரும்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. கரும்பின் நுனியிலிருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவதில் எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காமல் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மேற்கூறிய அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றும்படி தொடர்புடைய  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து  மாவட்டங்களுக்கும் கூடுதல் பதிவாளர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இந்தப் பணியினை கண்காணித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios