Sugarcane cutting farmers will be paid within 15 days - individual officer confirmed ...

கடலூர்

இந்தாண்டு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் அதற்கான தொகை வழங்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தனி அதிகாரி மணிமேகலை உறுதியளித்தார்.

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2017 – 2018–ஆம் ஆண்டுக்கான அரவை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சர்க்கரை ஆலை வளாகத்தில் தனி அதிகாரி மணிமேகலை தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் விவசாயச் சங்க நிர்வாகிகள் தேவதாஸ், சிட்டிபாபு, வீரசோழன், அப்பாதுரை, இளவரசன், செங்குட்டுவன், முருகன், குபேந்திரன், சங்கர் மற்றும் விவசாயிகள், ஆலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், "இந்தாண்டு நவம்பர் மாதத்தில் கரும்பு அரவை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை குறைந்த அளவு விவசாயிகளே பதிவு செய்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பார்த்தால் 75 ஆயிரம் டன் கரும்பு மட்டுமே அரவை செய்யும் நிலை உள்ளது. ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு, உடனடியாக அதற்கான கிரய தொகையை வழங்க வேண்டும்.

அடுத்தாண்டு அரவை பருவத்திற்கு அதிகளவில் கரும்பு பயிரிட ஆலை சார்பில் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

வேறு ஆலையில் பணிபுரிந்த கரும்பு அலுவலர்கள், மேலாளரை எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்க ஆலைக்கு நியமிப்பது நியாயம் இல்லை. ஏனெனில், சர்க்கரை ஆலை ரூ.120 கோடி கடனில் மூழ்கி உள்ளது. இப்படிபட்ட சூழ்நிலையில் அவர்களை நியமனம் செய்தால், ஆலைக்கு கூடுதல் செலவாகும்" என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

அதற்கு ஆலையின் தனி அதிகாரி மணிமேகலை, "இந்தாண்டு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் அதற்கான தொகை வழங்கப்படும். வேறு ஆலைகளில் இருந்து பணிக்கு வந்துள்ளவர்கள், சர்க்கரை துறை அலுவலர்கள் மூலம் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சொட்டு நீர்பாசனம் மூலம் கரும்பு பயிரிட விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி அடுத்தாண்டில் விவசாயிகள் அதிகளவு கரும்பு சாகுபடி செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.