sugar price hike in TN ration shops

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை தமிழக அரசு திடீரென்று , இரண்டு மடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. வரும் 1 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பாக தமிழககூட்டுறவு, உணவுமற்றும்நுகர்வோர்பாதுகாப்புதுறையின்முதன்மைச்செயலாளர்குமார்ஜெயந்த், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் விலையை கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் என நிர்ணயம் செய்தது உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரத்து 833 மெட்ரிக் டன் சர்க்கரையை கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் வரை ஒதுக்கி வந்தது. இந்த சூழ்நிலையிலும் மாதத்துக்கு 37 ஆயிரத்து 163 மெட்ரிக் டன் சர்க்கரையை ரேஷன் கடைகள் மூலம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் 50 காசுகள் என்ற விலைக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியது. அந்த சட்டப்படி, வறுமை கோட்டுக்கு கீழ் வருபவர்கள் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது மானிய விலையில் சர்க்கரை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்தது. அதன்படி, பொதுவினியோக திட்டம் மூலம் மானிய சர்க்கரையை அந்த்யோதயா அன்ன யோஜனா பிரிவினருக்கு மட்டுமே அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பிரிவில் வரும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ சர்க்கரை ரேஷன் கடையில் வழங்கப்படும்.



மற்ற பிரிவினர்களுக்கு வழங்கும்போது, 13 ரூபாய் 50 காசுகள் என்ற சர்க்கரை விலையில், போக்குவரத்து கட்டணம், கையாளுதல் கட்டணம், டீலர்கள் கட்டணம் போன்றவற்றை கூடுதலாக அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயித்துக்கொள்ளலாம் அல்லது அந்த கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்ததது.

அதன்படி, 1.6.17 முதல் சர்க்கரைக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது. 18.64 லட்சம் அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைகளுக்கு மட்டும் ஆயிரத்து 864 மெட்ரிக் டன் சர்க்கரையை மட்டும் மானிய விலையில் மத்திய அரசு வழங்குகிறது.

இதனால் மானிய விலையின் சுமை, முழுமையாக மாநில அரசின் மீது சுமத்தப்படுகிறது.


தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்க மாதத்துக்கு 33 ஆயிரத்து 636 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டொன்றுக்கு 1300 கோடி ரூபாய் செலவாகிறது.

சந்தை விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.45 என்ற வீதத்தில் சர்க்கரையை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. அவ்வளவு தொகைக்கு வாங்கினாலும் அதை அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைகள் தவிர மற்ற அட்டைதாரருக்கு மானிய விலையான கிலோவுக்கு ரூ.25 என்ற அளவில் வரும் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

அதில் வரும் கூடுதல் சுமையான கிலோவுக்கு 20 ரூபாய் என்ற தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். அதனால் ரூ.836.29 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.