பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 11,300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. இதை தொடர்ந்து.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு ஏரளாமானோர் சொந்த ஊர் சென்றனர்.
பண்டிகை முடிந்து, சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று மாலை முதல் சென்னை வர தொடங்கியுள்ளனர். இன்று காலை முதல் தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கோயம்பேடு வரவேண்டிய பஸ்கள். மதுரவாயல் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் நேற்று இரவு சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.
தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம், கிண்டி, அசோக் நகர் வழியாக கோயம்பேடு செல்லும் என அறிவிக்கப்பட்ட பஸ்கள், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக திருப்பி விடப்பட்டன.
முன்னறிவிப்பின்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திடீர் நடவடிக்கையால் தாம்பரம், கிண்டி மார்க்கத்தில் இறங்க வேண்டிய பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
போக்குவரத்து மாற்றம் காரணமாக பஸ் கட்டணத்தடன் கூடுதலாக கார் மற்றும் ஆட்டோக்களுக்கும் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் பஸ்கள் திருப்பி விடப்பட்டதால் பயணிகள், குழந்தைகளையும், அவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் வைத்து கொண்டு கடும் அவதிக்குள்ளாகினர்.
