Students need to achieve world record by using government schemes - Minister Advise
வேலூர்
அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு பள்ளி மாணவ, மாணவிகள் உலகளவில் சாதனை படைக்க வேண்டும் என்று மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுரை வழங்கினார்.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிகணினி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார்.
மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:
“வேலூர் மாவட்டத்தில் 34 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்று நோக்கில் மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு வந்தத் தலைவர்கள் அத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். உலகத் தரத்தில் கல்வி இருக்க வேண்டும் என்ற நோக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.
குறிப்பாக, கிராமப்புற ஏழை மாணவர்களும் தங்கு தடையின்றி பள்ளிச் சென்று வர இலவச மிதி வண்டிகளை வழங்கினார். ஒரு காலத்தில் செல்வந்தர்களின் பிள்ளைகளின் பையில் இருந்த மடிக்கணினியை பாமர ஏழை மாணவர்களின் கையிலும் இருக்கும் வகையில் இலவச மடிக்கணினி திட்டத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தொடங்கினார்.
இத்திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்க ஆசிரியர்கள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.
மாணவர்கள் இத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு, உலகளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பெற்றோருக்கும், பள்ளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
