திருப்பூர்

திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அப்பகுதி மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் மாணிக்காபுரத்தில் கடந்த 11–ஆம் தேதி டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, “சாராயக் கடை எங்கள் பகுதிக்கு வேண்டாம். இந்த டாஸ்மாக் சாராயக் கடையை இங்கிருந்து அகற்றுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும், “இந்த சாராயக் கடையால் மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாதுகாப்பு இருக்காது என்றும், குறிப்பாக பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே இருக்கும்” என்றும் அந்த பகுதி மக்கள் புகார் எழுப்பினர்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது. அத்துடன் சுதந்திர தின விழாவையொட்டி மாணிக்காபுரத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தையும் அந்த பகுதி மக்கள் புறக்கணித்துவிட்டு டாஸ்மாக் சாராயக் கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கேட்டனர். அதற்கு, உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சினம் கொண்ட அந்தப் பகுதி மக்கள், பல்லடத்தில் இருந்து மாணிக்காபுரம் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் பந்தல் அமைத்து, டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கினர்.

அம்மக்கள், முதல் நாளான நேற்று முன்தினம் வாயில் கருப்பு துணி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளான நேற்று அந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் மக்களுடன் போராட்டத்தில் இறங்கினர்.

மாணவர்கள் அனைவரும் தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டப் பந்தலில் அமர்ந்து டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.