சிவகங்கை
 
சிவகங்கையில் மாணவனைத் தாக்கிய போலீஸைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் 800-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரி சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இங்கு இளங்கலை மூன்றாமாண்டு படித்து வரும் மாணவர் அருண். இவர் மானாமதுரையில் இருந்து பேருந்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் மானாமதுரை சிப்காட் காவலாளர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். 

இதனைக் கண்டித்து நேற்று காலை சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கல்லூரி வளாகத்தில் 800–க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் 10 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். 

அதனைப் பெற்று கொண்ட கண்காணிப்பாளர், "இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.