வர்தா புயலால், சாய்ந்து விழுந்த பள்ளிக்கூட மின் கம்பங்கள் சீரமைக்கப்படாததால் 12 நாள்களாக குடிநீருக்கும், கழிப்பறைக்கும் தண்ணீரின்றி மாணவர்களும், ஆசிரியர்களும் அவதியடைந்து வருகின்றனர்.

வர்தா புயல் கரையைக் கடந்து 12 நாள்களாகியும் மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்சாரம் விநியோகிக்கப்படாததால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ளது நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளிக்கு இரண்டு மின் கம்பங்கள் வழியாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. வர்தா புயலால், இந்த இரண்டு மின் கம்பங்களும் சாய்ந்தன. பள்ளி வளாகத்தில் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.

இன்றோடு 13 நாள்களாகியும் மின் கம்பங்கள் சீராமைக்கப்படவில்லை. மின்சாரம் இல்லாததல் குடிநீருக்கும், கழிப்பறைக்கும் தண்ணீரின்றி மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து பள்ளிக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என மாணவர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்..