தூத்துக்குடி

இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியையை மீண்டும் அதே பள்ளிக்கூடத்தில் பணியமர்த்தக் கோரி விளாத்திகுளத்தில் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு மாணவர்கள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புளியங்குளத்தில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 61 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு தலைமை ஆசிரியை உள்பட இரண்டு நிரந்தர ஆசிரியைகளும், ஒரு தற்காலிக ஆசிரியையும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்தாண்டு இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இங்கு பணியாற்றி கொண்டிருந்த மற்றொரு ஆசிரியை கமலாபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்தாண்டு பள்ளிக்கூடத்தில் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியையை மீண்டும் புளியங்குளம் பள்ளிக்கூடத்தில் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று காலையில் அப்பகுதி மக்கள், மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும், குளத்தூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ராமலட்சுமி மற்றும் காவலாளர்கள் விரைந்து சென்று, முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து தலைமை ஆசிரியை மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஆகியோரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.

இதனையேற்று மக்கள் மற்றும் மாணவர்கள் அந்தப் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.