நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவிகளை முடியை பிடித்து அடித்த தலைமை ஆசிரியைக்கு எதிராக மாணவிகளின் போராட்டம் திசை மாறியுள்ளது. 

நீட் தேர்வின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றதால் தமது மருத்துவ கனவு கலைந்து விட்டதே என நினைத்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள், இளைஞர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நுங்கம்பாக்கம் ராஜாஜி சாலையில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் கடந்த 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாணவிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். 
இதையடுத்து பள்ளி நிர்வாகமும் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மாணவிகள் அவர்கள் கூறுவதை ஏற்க மறுத்துவிட்டார். 

இதைதொடர்ந்து சில மணி நேரத்துக்கு பிறகு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் மாணவிகளை பள்ளியில் இருந்து நீக்கி விட்டதாகவும், டிசி கொடுக்க உள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவிப்பதாக கூறி மாணவிகள் மீண்டும் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே பள்ளி மாணவிகளை முடியை பிடித்து இழுத்ததாகவும், கண்ணத்தில் அரைந்ததாகவும் மாணவிகள் தலைமை ஆசிரியை மீது குற்றம் சாட்டினர். 

இதையடுத்து நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவிகளை முடியை பிடித்து அடித்த தலைமை ஆசிரியைக்கு எதிராக மாணவிகளின் போராட்டம் திசை மாறியுள்ளது.