10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்த இளம்பெண் தனது தவறான தொடர்பால் இன்று கொலையாளி என்ற பட்டத்துடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் சி.ஏ. படித்து வரும் திருச்சி உறையூரைச் சேர்ந்த 21-வது ஈஸ்வரிக்கும், சென்னை மருத்துவமனையில் பணியாற்றி வந்த அரியலூரைச் சேர்ந்த 37 வயது பிசியோதெரபிஸ்ட் விஜயகுமாருக்கும் ரயில் பயணித்தின் போது நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு எல்லை மீறிய தொடர்பாக மாறியது.

அடிக்கடி இருவரும் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய விஜயகுமார், தன்னுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை காட்டி மிரட்டினார் என்பது ஈஸ்வரியின் வாக்குமூலமாகும். ஏற்கனவே திருமணமான விஜயகுமாருக்கு, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை 8-ம் தேதி திருச்சி திருவானைக்காவல் என்ற இடத்தில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொன்றது 3 பேர் கொண்ட கூலிப்படையினர் என்பதும், இதற்கு ஈஸ்வரி மூளையாக  செயல்பட்டதும் விசாரணையில் உறுதியானது.

 ஈஸ்வரி சரணடைந்த நிலையில் கூலிப்படையைச் சேர்ந்த திருச்சி மாரிமுத்து, கணேசன், குமார் ஆகியோரும் சரணடைந்துள்ளனர். அவர்களை திருச்சி போலீசார் சிறையில் அடைத்தனர். திருச்சி பேருந்து நிலையத்தில் வைத்து கொலையாளிகளை இளம்பெண் ஈஸ்வரி தேர்வு செய்துள்ளார். இதற்காக அவர்களுக்கு 55 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து, சி.ஏ. படிப்பிலும் முதல்நிலை மாணவியாக இருந்து வரும் மாணவி ஈஸ்வரி தனது தவறான தொடர்பால் இன்று கொலையாளி என்ற பட்டத்துடன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.