கணக்கு பாடம் சொல்லித்தர மறுத்ததால், கோபமான மாணவன் டியூஷன் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அம்பிகா என்ற ஆசிரியை, பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்திவந்தார். இவரிடம், வேப்பம்பட்டு அருள்கிருஷ்ணா நகரை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாக டியூஷன் படித்து வந்தார். 

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அம்பிகா டியூஷன் நடத்துவதை நிறுத்திவிட்டார். கடந்த இரண்டு நாட்களாக, அருள்கிருஷ்ணா நகரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன், கணக்கு பாடத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி டியூஷன் ஆசிரியையிடம் வந்துள்ளான். ஆனால், வேலை உள்ளது என கூறி மாணவனை ஆசிரியை திருப்பி அனுப்பியுள்ளார். 

இதனையடுத்து, நேற்று காலை 11 மணிக்கு டியூஷன் ஆசிரியை வீட்டுக்கு அம்மாணவன் வந்து, கணக்கு பாடத்தில் சந்தேகத்தை தீர்க்குமாறு வற்புறுத்தியதால், மாணவனை வீட்டுக்குள் ஆசிரியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தரையில் உட்கார்ந்தபடி சந்தேகத்தை ஆசிரியை கேட்டபோது, ‘அவரது பின்னால் நின்றபடி அம்பிகாவின் வாயை பொத்தி, தயாராக வைத்திருந்த காய்கறி நறுக்கும் கத்தியால், அவரது கழுத்தை அறுத்துவிட்டு மாணவன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

மாணவன் குத்தியதில் கீழே விழுந்த ஆசிரியை வலி தாங்கமுடியாமல் கத்தியதால், அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு 10 தையல் போடப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, கத்தியால் வெட்டிய அந்த மாணவனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.