பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ராஜவிக்கேஸ் என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்குவதற்காக விடுதி வசதியும் உள்ளது.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே இறையூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் சதீஷ், +2 படித்து வருகிறார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த சதீஷ், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக, அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அங்குவந்த சதீஷின் பெற்றோர், மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக மாணவன் சதீஷின் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சதீஷின் உடலைக் கைப்பற்றி, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இங்கு பயிலும் மாணவர்கள் திடீர் என மாயமாவதும், பின்னர் கண்டுபிடிப்பதும் வாடிக்கையாக உள்ளது என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளர்.
