ப்ளூவேல் விளையாட்டிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் ப்ளூவேல் விளையாட்டு தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விளையாட்டால், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரியில் ஒரு மாணவர் உயிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ப்ளூவேல் விளையாட்டால், சென்னையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, செம்மஞ்சேரியை சேர்ந்தவர் பாபு. இவரின் மகன் கிஷோர் (17), வியாசர்பாடி, கக்கன்ஜி காலனியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். கன்னிகாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கிஷோர் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்தார்.

கிஷோர் கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளான். பள்ளிக்கும் சரிவர போவதில்லை என்றும் எப்போதும் செல்போனை பயன்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் கிஷோர், வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். 

வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பாட்டி, கிஷோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு அதிர்ந்தார். இதையடுத்து, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், உடலைக்
கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கிஷோர், ப்ளூவேல் கேம் விளையாடி வந்தது தெரியவந்துள்ளது. கிஷோரின் செல்போனையும் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.