ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு கையை அறுத்துக்கொள்ள முயன்ற மாணவன் ஒருவனை அவனது பெற்றோர் மீட்ட சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் ப்ளூவேல் விளையாட்டு தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ப்ளூவேல் விளையாட்டால் தமிழகத்தில் ஒருவரும், புதுச்சேரியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவுக்குள் நுழைந்த இந்த ப்ளூவேல் விளையாட்டு, தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. இந்த விளையாட்டால், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த மாணவரின் துயரச் செய்தி அடங்கும் முன்பே புதுச்சேரியில் ஒரு மாணவர் உயிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

குழந்தைகள், லேப்டாப், ஸ்மார்ட்போன்ஸ், டேப்லட் பயன்படுத்துகையில் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ப்ளூவேல் விளையாட்டை தடை செய்யக்கோரி, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த 6 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, அவனது பெற்றோர் மீட்டுள்ளனர்.

ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவன் கபிலேஷ், தனது கையை அறுத்துக் கொள்ள முயற்சித்துள்ளான். இதனை கவனித்த அவனின் பெற்றோர், உடனடியாக அவனை மீட்டுள்ளனர். கையை அறுத்துக்கொள்ள கபிலேஷ் முயன்ற பின்னரே, ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்தனர்.