நெல்லையில் தனியார் பள்ளியொன்றில் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுவர் இடிந்து விழுந்ததில், படுகாயமடைந்த மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பொருட்காட்சி திடல் அருகேயுள்ள டவுன் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று பள்ளி இயங்கி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு மாணவன் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது.

உடன் படித்த மாணவர்களின் இந்த உயிரிழப்பை தொடர்ந்து, அங்கு பள்ளியிலிருந்து பிற மாணவர்கள் பெரும் அச்சத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர். தற்போது மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறனர். இந்த விபத்துக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தற்போது மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே விபத்து குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை தொடங்கியிருப்பதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான நிலையில், பள்ளி மாணவர்கள் பலரும் அச்சத்தில் இருப்பதால், அப்பகுதி முழுக்க பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது. தகுதியில்லாத பள்ளி கட்டடத்தை முதன்மை கல்வி அதிகாரிகள் முறையாக பரிசோதிக்காமல் விட்டது தான் விபத்திற்கு காரணம் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தனியார் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழந்து விபத்தில் பலியான மாணவர்கள் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
