கழுகுமலை,
கழுகுமலையில் 10–ஆம் வகுப்பு மாணவியின் கை, கால்களை கட்டி, தண்ணீர் நிரப்பிய பேரலுக்குள் அடைத்து வைத்தவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பாலசுப்பிரமணியம் தெருவைச் சேர்ந்த கொத்தனார் உதயகுமார். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இவர் கழுகுமலை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் உஷா (15) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10–ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த இலட்சுமணன் கோவில்பட்டியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார். இதற்கிடையே இலட்சுமணன் இறந்து விட்டார். அதன்பிறகு இலட்சுமணன் மனைவி ஆனந்தவல்லியிடம், கொடுத்த கடனை பார்த்தசாரதி திருப்பிக் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆனந்தவல்லியை, பார்த்தசாரதி தாக்கியுள்ளார்.
இதுகுறித்து ஆனந்தவல்லி கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவருக்கு ஆதரவாக விஜயலட்சுமியும் நீதிமன்றத்தில் சொல்வதாக கூறினார்.
புதன்கிழமை காலையில் பாக்கியலட்சுமி வேலைக்கு சென்று விட்டார். உஷா பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அங்கு வந்த பார்த்தசாரதி உள்பட இரண்டு பேர், மாணவி உஷாவின் வாயை பொத்தி கை, கால்களை கட்டினர். பின்னர் முக்கால் பாகம் தண்ணீர் நிரப்பப்பட்ட பேரலுக்குள் மாணவியை அடைத்து வைத்து விட்டு தப்பிச் சென்றனர்.
வீடு திரும்பிய பாக்கியலட்சுமி தன்னுடைய மகளை பல இடங்களில் தேடினார். பின்னர் பேரலுக்குள் மயங்கி கிடந்த தன்னுடைய மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உஷாவை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளித்தார். இதுகுறித்து கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் பார்த்தசாரதி உள்பட இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே மாணவியை பேரலுக்குள் அடைத்து கொடுமைப்படுத்தியதாக பார்த்தசாரதி உள்பட 2 பேரை கைது செய்யக்கோரி அந்த பகுதி பொதுமக்கள், கழுகுமலை– சங்கரன்கோவில் பிரதானசாலை மேல் கேட் பகுதியில் வியாழக்கிழமை காலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சுப்பையா, நகர செயலாளர் முருகன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நம்பிராஜன் உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உடனே காவல்துறை இன்ஸ்பெக்டர் ஷாஜகான் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் தலைமறைவான பார்த்தசாரதி உள்பட 2 பேரையும் 2 நாட்களில் கைது செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
