தஞ்சாவூர் 

காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தஞ்சாவூர்  மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு கிராம மக்கள், "காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும.

காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். 

ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களை காவிரி படுகையிலிருந்து வெளியேற்ற வேண்டும். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவேண்டும். 

நியூட்ரினோ திட்டத்தை கைவிடவேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் பாப்பாநாட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, கிராம மக்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற ஒரத்தநாடு துணை காவல் கண்காணிப்பாளர் குமார், ஆய்வாளர்கள் ஹேமலதா, ஜெகதீஸ்வரன், உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மனி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.