அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் - வங்கிப் பணியாளர்கள் அறிவிப்பு...
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரியலூர்
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் நடத்திய பேரவைக் கூட்டம் அரியலூர் மாவட்டம், செயங்கொண்டத்தில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், அச்சங்கத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமைத் தாங்கினார். டெல்டா மண்டலச் செயலாளர் மணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் புலிகேசி வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் வரவு - செலவு கணக்கை மாவட்டச் செயலாளர் கிட்டப்பா வாசித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சோலைமுத்து உறுதிமொழியை வாசித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ராஜசெல்வம் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாநிலச் சிறப்புப் பொதுச் செயலாளர் குப்புசாமி, மாநிலப் பொதுச் செயலாளர் முத்துபாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பின்னர், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்துபாண்டியன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில், ""சங்கப் பணியாளர்களுக்கும், அங்காடிப் பணியாளர்களுக்கும் நல்ல ஊதியம் வழங்கவேண்டும்.
பணியாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கருணை ஓய்வூதியம் போன்றவற்றை உடனே வழங்கவேண்டும்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்கும், நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கும் இடையேயான ஊதியத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்" உள்ளிட்டப் பல்வேறுக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
எங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவேண்டும். இல்லையென்றால் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து செப்டம்பர் மாதத்தின் இறுதியில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று" என்று கூறினார்.
இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள் சங்கரன், துரைக்கண்ணு, மண்டல இணைச் செயலாளர் கணேசன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட இணைச் செயலாளர் பிரபா நன்றிக் கூறிக் கூட்டத்தை முடித்து வைத்தார்.